Friday, September 17, 2010

முர‌ண்ப‌ட்ட‌ நியாய‌ங்க‌ள்...

அடகு வைக்கப் பட்ட மூளையின்
எஞ்சிய துளிகளின் துருக்களை
சுரண்டிவிட்டு யோசித்துப் பார்க்கிறேன்...
ந‌டைமுறையில் முர‌ண்ப‌ட்ட‌ சில‌ நியாய‌ங்க‌ளை...

நாளைக்காக‌ இழ்ந்து விடுகிறோம்
ந‌ம்முடைய‌ "இன்றை"

எதிர்கால‌ சேமிப்புக்காக‌ செல‌வாகிற‌து
நிக‌ழ்கால‌ ச‌ந்தோஷ‌மும்
இற‌ந்த‌கால‌ நினைவு அசைக‌ளும்...

க‌டிகார‌ முள்ளை விட‌ வேக‌மாக‌ ஓடி
நேர‌த்தில் ஜெயித்து, கால‌த்தில்
கோட்டை விட்ட‌ வெற்றிக‌ள் ஏராள‌ம்...

மிருக‌வ‌தை காட்டுமிராண்டித்த‌ன‌ம் என‌ப் பேசி
போர்க்க‌ள‌ம் எனும் பேரால்
ம‌னித‌வ‌தை செய்யும் காட்டுமிராண்டிக‌ள் நாம்...

ம‌னித‌ப் பிண‌ங்களில் மேடை க‌ட்டி
ம‌னித‌ம் ப‌ற்றிய‌ பிர‌ச்சார‌ங்க‌ள்...

காத‌லுக்கு ம‌றியாதை‍.
ந‌ம் வீட்டுப் பெண் ஓடிப் போகாத‌வ‌ரை...

ஒழுக்க‌ மீற‌லும் ஒத்துக் கொள்ள‌ப் ப‌டும்
பிற‌ன் தன் ம‌ணை நோக்காத‌ வ‌ரை....

வீனாக‌ப் போனாலும் உண‌வு ‍_ காசில்லாது
வெறுமெனே போகாது ஏழைக‌ளின் வ‌யிற்றுக்கு...

காசில்லாம‌ல் ப‌ட்டினி கிட‌ப்போரை விட‌
நேர‌மின்மையால் ப‌ட்டினி கிட‌ப்போர்
எண்ணிக்கை இங்கே அதிக‌ம்...

இத்த‌னையும் எழுதிவிட்டு
நேற்று எறும்பு ஊர்ந்த‌த‌ற்காய்
இன்று இட‌ம் மாற்றி வைக்கிறேன் டப்பாவை

" க‌ச‌ந்துதான் போன‌து என் வீட்டுச் ச‌க்க‌ரையும்..."

No comments: