Thursday, December 22, 2011

உடைக்க முடியாத...
















உடைந்த ஓட்டுச் சில்லை சாலைச் சிறுவனின்
கால்கள் எத்திச் செல்கிறது...
காலிக் கோப்பையை தேநீர்
நிரப்பிக் கொண்டே இருக்கிறது...
உனக்கென எழுதப்பட்ட கவிதைகளை
உன் இறுக்கமான மௌனம்
புதைத்துச் செல்கிறது...

எங்கோ தெரியும் மலைகளுக்குப் பின்
ஒளிந்திருக்கும் ரகசியத்தையும்
கடலுக்குள் மூழ்கும் சூரியனின்
அதிசயத்தையும்
அடர்ந்த காட்டில் நரியின் ஓலத்தின்
அச்சுறுத்தலையும்
ஊழிக் காற்றில் நடுங்கும் இதழ்களைச்
சுமந்திருக்கும் பூவின்
அச்சங்களையும்
பொருத்தியுள்ளது உன் மௌனம்...

அதிகமாகச் செலவழித்து விட்டேன்
அனேக வார்த்தைகளை
உன் மீதான காதலை, நம்பிக்கைகளை
உனக்கான எதிர்பார்ப்புகளை
என்னின் சில ஏமாற்றங்களை..

அத்தனையும் உடைக்க முடியாத
உன் மௌனத்துக்குப் பின்னே
நீ ஒளித்து வைத்துள்ள
பாசாங்குகளை செரிக்க முடியாமல்
உடைந்துவிடுகின்றன..

என்றேனும் மரணத்தின் ஸ்பரிசத்தை
நீ உணரும் போது
உணர்வுகளின் வெளிகள் நீண்டு
உறவுகளின் சுருக்கம் நீ அடையும்போது
தனிமை எனும் பாலை மண்ணில்
புதையுண்டு ஒரு துளி நீருக்கும்
தாங்கிப் பிடிக்கும் தோளுக்கும்
தழுவிச் கொள்ளும் கைகளுக்கும்
நீ ஏங்கும் போது

எனை மறந்து
யாருமற்றவன் என நீ வருந்தும்
அந் நொடிப்பொழுதில்














உனை மட்டும் சுமந்திருக்கும்
என் உயிரின் மிச்சங்கள் உதிர்ந்துவிடும்
துடி துடித்து...

No comments: