Tuesday, May 15, 2012

வேராய்.... வேறாய்












எனது கிளைகள் உனக்கான பூவை
ஒவ்வொருமுறை மலரச் செய்யும் போதும்
எனது வேர்கள் வென்னீரில் மூழ்குகின்றன

உனக்கான என் ஒவ்வொரு
புன்னைகையும்
ஒரு துளி கண்ணீரில் நனைந்தே
விரிகின்றது...

தேன் சொரியும் என் பூக்களின்
மகரந்தங்கள் யாவும்
ஊமத்தம்பூவின் கசந்த மௌனத்தை
தடவியே வருகிறது..

என் நந்தவனத்தில் விருட்சத்தின்
விதையாய் விழுந்தவன் நீ

உனக்கும் எனக்குமான பந்தம்
உனது கிளைகளை அழகு படுத்தும்
மலராகவோ
படர்ந்து தழுவும் கொடியாகவோ
துளிர்த்துத் தவழும் இலையாகவோ அல்ல

உன்னிலிருந்து மண் புதையும் வேராய்
வேறாய் மட்டுமே

என் மாலைகளின் மரணங்களின் முடிவில்
இருளில் நான் தடுமாறித் தவிக்கையில்
உயிர்த்தெழும் காலையாய்
நீ வருகிறாய்

துளித் துளியாய் மழைத்துளியாய்
என்னில் நிரம்புகிறாய்
நீ நிரம்ப நிரம்ப
நான் காலியாகிக் கொண்டே இருக்கிறேன்

No comments: